search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் போராட்டம்"

    சபரிமலையில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகளை மீறி, கேரளாவைச் சேர்ந்த பெண்கள் சாமி தரிசனம் செய்ததையடுத்து சன்னிதானம் மூடப்பட்டது. #SabarimalaProtest #SabarimalaWomen
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி சென்றபோது பக்தர்களின் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், எப்படியும் சபரிமலையில் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்த இரண்டு பெண்களும், மீண்டும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகினர்.

    இதையடுத்து நேற்று மீண்டும் அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு  இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். அவர்கள் 18 படி ஏறாமல் பின்வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

    இதையடுத்து கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது. கோவில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே இருந்த பக்தர்களை போலீசார் வெளியேற்றினர். கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்த பிறகு நடை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaProtest #SabarimalaWomen
    சபரிமலையில் போலீசாரின் கெடுபிடியை கண்டித்து பக்தர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர். #SabarimalaDevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு இருமுறை கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலையில் வன்முறையும், மறியல் போராட்டமும் நடந்தது.

    இந்த போராட்டங்கள் சபரிமலையில் மண்டல பூஜை விழாவின் போது தொடராமல் இருக்க போலீசார் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    அதன்படி சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்க கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

    அப்பம், அரவணை விற்கும் கடைகளும் இரவில் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இரவு நேரத்தில் சபரிமலை செல்ல நடைபந்தலில் காத்திருக்கவும் கூடாது என்று பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட 16-ந்தேதி மாலை முதலே போலீசாரின் உத்தரவுகள் அமலுக்கு வந்தது. 17-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே முதல் நாளில் இருந்தே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர். அவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே சன்னிதானம் செல்ல அனுமதித்தனர்.

    நடைபந்தலிலும் பக்தர்களை காத்திருக்க அனுமதிக்கவில்லை. நேற்று மாலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இரவு 10 மணி ஆனதும் சன்னிதானத்தை விட்டு வெளியேறும்படி போலீசார் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்த பக்தர்கள் நடை பந்தல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷ்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை சமரசம் செய்தார். அசம்பாவிதங்களை தடுக்கவே போலீசார் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும், அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பக்தர்கள், ஐயப்பனை தரிசிக்க கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர்.

    போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். 100 பேர் கைது செய்யப்பட்டு பம்பை போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதற்கு பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஐயப்ப பக்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட பின்பு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நடைபந்தலில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சன்னிதானம் செல்ல காத்திருப்பார்கள். ஆனால் கடந்த 2 நாட்களாக போலீசார் காட்டும் கெடுபிடி, பா.ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் நடத்திய முழு அடைப்பு காரணமாக நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    நடைபந்தல் காலியாக இருந்ததோடு, 18-ம் படியிலும் பக்தர்கள் நெரிசல் இன்றி ஏறிச் சென்றனர். அப்பம், அரவணை விற்பனையும் கடந்த ஆண்டைக்காட்டிலும் பாதியாக குறைந்து விட்டது. நேற்று சபரிமலையில் கேரளா, தமிழ்நாடு பக்தர்களின் வருகை மிக மிக குறைவாக இருந்தது. ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களே வந்திருந்தனர்.

    இதற்கிடையே சபரிமலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும், பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவும் மத்திய போலீஸ் படையை அழைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

    வழக்கமாக மண்டல பூஜை நெருங்கி வரும் போது கண்காணிப்பு பணிக்காக மத்திய கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணிக்கு வருவார்கள். அவர்களை இப்போதே அழைத்தால் பா.ஜனதா கட்சியினரின் போராட்டத்தை அவர்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கேரள அரசு கருதுவதாக கூறப்படுகிறது.  #SabarimalaDevotees
    பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். #Sabarimala #SabarimalaProtests
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.  

    இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் இந்த பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை சபரிமலைப் பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.



    இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையளர் கவிதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சன்னிதான வாசலை நெருங்கியபோது, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Sabarimala #SabarimalaProtests

    பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல என கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister
    பத்தனம்திட்டா:

    சபரிமலை தீர்ப்புக்கு வலுத்து வரும் எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெகானா என இரண்டு பெண்கள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.

    இதுபற்றி தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. பெண்ணியவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.



    இன்று கோவிலுக்கு வந்த பெண்களின் பின்னணி குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. பெண்ணியத்தை நிரூபிக்கவோ, போராட்டம் நடத்தவோ சபரிமலை உகந்த இடம் அல்ல. பெண்ணியவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #DevaswomsMinister

    ×